ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

உமய்யாத்கள் வரலாறு 1

உமய்யாத்கள் வரலாறு
கூ.செ.செய்யது முஹமது
நபி(ஸல்) அவர்களுக்கும், நேர்மையான நான்கு கலீஃபாக்களுக்குப் பிறகு பெரிய சாம்ராஜ்ஜியமாக துவங்கிய இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பம்
ஆறாம் நூற்றாண்டுகளில் மக்காவில் இருந்த புகழ்பெற்ற குடும்ப பாரம்பரியத்தில் குரைஷி பழங்குடிவம்சம் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அதன் மதிப்புமிக்க தலைவராக அப்த் மனாஃப் இப்ன் குஸாய் இருந்தார். அவரின் மகன்களில் ஒருவர் அப்த் மனாஃப். அவருடைய இரு மகன்கள் ஹாஷிம், அப்த் ஷம்ஸ். இந்த இருமகன்களின் வாயிலாகத்தான் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வரிசையாகத் தோன்றினார்கள். அப்த் ஷம்ஸின் ஒரு மகன் தான் உமய்யா இவரின் வழியில் ஆட்சி செய்தவர்களை ‘உமய்யாக்கள்’ என்றழைத்தனர். நபி(ஸல்) களாரின் காலத்திலிருந்தே ஹாஷிம்களுக்கும், உமய்யாத்களுக்கும் கசப்பான அனுபவங்கள் இருந்தன. நபி(ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை எதிர்த்து ஆரம்பத்தில் அவதூறாகவும், தொல்லைகளும் கொடுத்தவர்கள் உமய்யாக்கள். அது ‘பத்ர்’ என்னும் போரில் வெளிப்பட்டது. பத்ர் போரில் உமய்யாத்களான உத்பா இப்ன் ராபியாஹ்(தந்தை), வாலித் இப்ன் உத்பா(மகன்) மற்றும் ஷய்பாஹ் ஆகி யோர் முறையே ஹாஷிம்களான அலி இப்ன் அபுதாலிப்(ரலி), ஹம்ஸா இப்ன் முத்தலிப்(ரலி) மற்றும் உபைதாஹ் இப்ன் அல் ஹரித் (ரலி) ஆகியோரால் கொல்லப்படுகின்றனர். இது உமய்யாவின் பேரர் அபு சுஃப்யான் இப்ன் ஹர்ப் என்பவருக்கு நபி (ஸல்) அவர்கள் மீதும், இஸ்லாத்தின் மீதும் பெரும் கோபத்தை உண்டு செய்கிறது
இதனால் அபுசுஃப்யான் பத்ர் போருக்கு பழிவாங்க உஹுத் போரை சந்தித்தார். இதில் முஸ்லீம்கள் படை தோல்வி அடைந்தது. இதில் அபு சுஃப்யானின் மனைவி ஹிந்த் என்ற பெண்மனி பத்ர் போரில் தன் தந்தை உத்பா இப்ன் ராபியாஹ் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் விதமாக உஹுத் போரில் கொல்லப்பட்ட நபி (ஸல்) அவர்களின் சிறிய தகப்பனார் ஹம்ஸா இப்ன் முத்தலிப் (ரலி) அவர்களின் உடலை மிகவும் அகோரமாகச் சிதைத்தார். பின்னாளில் நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரை வெற்றி கொண்டபின் எல்லோருக்கும் பொது மன்னிப்பு அளித்தார்கள். அதில் அபு சுஃப்யான், அவர் மனைவி ஹிந்த், மகன் மூ ஆவியா (பிற்கால கலீஃபா) ஆகியோரும் அடங்குவர். பெரும்பான்மையான சரித்திர ஆசிரியர்கள் உமய்யாத்களின் சாம்ராஜ்ஜியத்தின் முதல் கலீஃபாவாக மூஆவியாவைத் தான் குறிப்பிடுகிறார்கள். ஆனால், உண்மையில் நேர்மையான கலீஃபாக்கள் (RIGHTLY KHALIFAS) வரிசையில் மூன்றாவது கலீஃபாவாக இருந்த உதுமான் இப்ன் அஃப்ஃபான் (ரலி) அவர்கள் தான் உமய்யாத்களின் குடும்ப பாரம்பரியத்தில் முதல் கலீஃபா ஆவார்.  
உதுமான் இப்ன் அஃப்ஃபான்(ரலி) அவர்கள் ஆளும் போது நம்பிக்கைக்கு ஏற்றவாறு பெரும்பான்மையான தனது உறவினர்களையே உயர்பதவியில் அமர்த்திய தாகச் சொல்லப்படுகிறது. இதுவே பிற்காலத்தில் உமய்யாக்கள் ஆட்சிக்கு வர அஸ்திவாரமாக இருந்ததாகவும் கருதப்படுகிறது இதில் குறிப்பாக உதுமான் இப்ன் அஃப்ஃபான்(ரலி) அவர்களின் மிகவும் நெருங்கிய உறவினரான மர்வான் இப்ன் அல் ஹகம் அவர்களுக்கு தனக்கு அடுத்த ஸ்தானத்தில் பதவி அளித்தது, ஹாஷிம் குடும்பத்தினர்கள் மத்தியில் பெரும்புயலைக் கிளப்பியது. ஏனென்றால், நபி(ஸல்) அவர்கள் மர்வான் இப்ன் அல் ஹகம் அவர்களையும், அல் ஹகம் இப்ன் அபி அல் அஸ் அவர்களையும் தனது வாழ்நாள் வரை மதீனாவுக்குள் நுழைய தடை விதித்திருந்தார்கள். மேலும் உதுமான் இப்ன் அஃப்ஃபான்(ரலி) அவர்கள் தன் ஒன்றுவிட்ட சகோதரர் வாலித் இப்ன் உக்பா அவர்களை குஃபா நகரத்தின் கவர்னராக பதவி அளித்திருந்தார்கள். இவரும் வெளியில் கூறமுடியாத ஒரு குற்றம் செய்திருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். உதுமான் இப்ன் அஃப்ஃபான்(ரலி) அவர்கள் பெரும் நிலப்பரப்பைக்கொண்ட சிரியாவின் கவர்னராக மூஆவியா அவர்களையும், தனது இன்னொரு சகோதரர் முறையான அப்துல்லாஹ் இப்ன் சாஃத் அவர்களை எகிப்து கவர்னராகவும் நியமித்திருந்தார்கள். ஆனாலும் உதுமான் இப்ன் அஃப்ஃபான்(ரலி) அவர்கள் தனக்குப் பிறகு இன்னார்தான் கலீஃபாவாக வர வேண் டும் என்று அறிவிக்காததால் உமய்யாத்களின் சாம்ராஜ்ஜியத்தின் ஆரம்ப கலீஃபா வாக சரித்திர ஆசிரியர்கள் இவரை சேர்க்கவில்லை. 
639 ல் ப்ளேக் என்னும் கொடிய நோயின் மூலம் சிரியாவின் பெரும்பான்மையான மக்களுடன் அபு உபைதாஹ் இப்ன் அல் ஜர்ராஹ் என்ற கவர்னரும் இறந்தார். உடன் மூஆவியா அவர்கள் சிரியாவின் கவர்னராக பதவியேற்றார். ஆரம்பத்தில் மூஆவியா அவர்கள் முதல் கலீஃபா அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் காலத்தில் பைஸாந்தியர்களை எதிர்க்க இராணுவத்தில் சேர்ந்து சிரியா அனுப்பப் பட் டார். பின் இரண்டாவது கலீஃபா உமர் இப்ன் கத்தாப் (ரலி)  அவர்களின் காலத்தில் டமாஸ்கஸின் கவர்னராக பதவிபெற்றார். இவர் 649 ல் அரபு பைஸாந்தியப் போரில், பைஸாந்தியர்களின் கடலோரத் தாக்குதல்களை சமாளிக்க மோனோ ஃபிசிடிஸ் கிறிஸ்துவர்கள் மற்றும் ஜாகோபைட் சிரிய கிறிஸ்தவர்களை மாலுமி களாகவும், முஸ்லீம்களை படைவீரர்களாகவும் இணைத்து கப்பற்படை ஒன்றை நிர்மாணித்தார். இது 655 ல் மாஸ்ட் போரில் பைஸாந்தியர்களைத் தோற்கடித்து இஸ்லாமியப் படைகளுக்கு மெடிட்டரேனியன் கடல் திறந்து விடப்பட்டது. மூ ஆ வியா அவர்கள் பழைய ரோமன் சிரிய படைகளை கொண்டு ஒழுக்கமான சிறப் பான இராணுவத்தை அமைத்தார். ஏற்கனவே எகிப்தை வென்று பின்னாளில் உதுமான் இப்ன் அல் அஃப்ஃபான்(ரலி) அவர்களால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அம்ர் இப்ன் அல் ஆஸ் அவர்களுடன் பெரிதும் நட்பாகப் பழகினார்..
குறிப்பாக முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தனது இறுதி உரையில் அரபுக்களின் பூர்வீகத்தைப்பற்றியும், தேசியத்தைப்பற்றியும் சொல்லி இருந்தார்கள். ஆனால் அவர்களின் மறைவிற்குப்பிறகு, அரபுப் பழங்குடியினர் ரோமன்பெர்ஷியன் போர், பைஸாந்திய சஸானிய போர்களில் தங்கள் ஆழமான சந்ததியின் ஆதாயத்தையே பார்த்தார்கள். ஏனென்றால், ஆரம்பத்தில் ஈராக் பெர்ஷிய சஸானியர்களின் ஆட்சியிலும், சிரியா பைஸாந்தியர்களின் ஆட்சியிலும் இருந்தது. இரு பகுதியைச் சேர்ந்தவர்களும் புதிய இஸ்லாமிய ஆட்சியில் தலைநகரம் தங்கள் பகுதியில் இருக்கவேண்டும் என்று விரும்பினார்கள். இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த நேர்மையான கலீஃபாக்களின் வரிசையில் இரண்டாவது கலீஃபாவான உமர் பின் அல் கத்தாப் (ரலி) அவர்கள் கவர்னர்களை ஒற்றர்கள் மூலம் கண்காணித்தார்கள். எந்த கவர்னராவது காரணமில்லாமல் அளவுக்கு மீறி சொத்து சேர்த்திருந்தால் உடனே அவர்களை பதவியைவிட்டு விலக்கினார்கள்.
உதுமான் இப்ன் அல் அஃப்ஃபான்(ரலி) அவர்கள் முதுமை அடைந்தபொழுது, கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த அதிகாரத்திற்கு வந்த மர்வான் அவர்கள் அரசு விதிகளைத் தளர்த்தினார். அதற்கு முன் மர்வான் அவர்கள் சில முக்கிய பொறுப்புகளில் இல்லை. உதுமான் இப்ன் அல் அஃப்ஃபான் (ரலி) அவர்களின் அருகில் பெரும்பாலும் அபுபக்கர் சித்தீக்(ரலி) அவர்களின் மகன் முஹம்மது இப்ன் அபுபக்கரும், அலி இப்ன் அபு தாலிப்(ரலி) அவர்களின் வளர்ப்பு மகனும், ஜாஃபர் அல் சாதிக் அவர்களின் பாட்டனாரும் மேலும் சில எகிப்தியர்களும் இருந்தார்கள். அங்கிருந்த எகிப்தியர்கள்தான் பின்னாளில் உதுமான் இப்ன் அல் அஃப்ஃபான்(ரலி) அவர்களைப் படுகொலை செய்ததாக நம்பப்படுகிறது. இந்த படுகொலைக்குப்பின் 656 ல் நபி (ஸல்) அவர்களின் மருமகன் அலி இப்ன் அபு தாலிப் (ரலி) அவர்கள் கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். அலி(ரலி) அவர்கள் தங்கள் தலை நகரை பாதுகாப்பு கருதி மதீனாவிலிருந்து குஃபா என்ற நகரத்திற்கு மாற்றினார்கள். 
சிரியாவில் கவர்னராக இருந்த மூஆவியா அவர்கள் உதுமான் இப்ன் அல் அஃப் ஃபான்(ரலி) அவர்களின் படுகொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டினார்கள். இதனால் முதல் உள்நாட்டுக் கலவரம் (FIRST FITNA) ஆரம்பித்தது. இதற்கு மர்வான் அவர்கள்தான் தூண்டியதாக சொல்லப்படுகிறது. மேலும், நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள், தல்ஹா(ரலி), அல் ஸுபைர் (ரலி) மற்றும் இரண்டு நபித்தோழர்கள் கலவரத்தைக் கட்டுப்படுத்த பஸ்ரா சென்று கொலைக்குற்றவாளிகளை கைது செய்ய அலி (ரலி) அவர்களிடம் வேண்டுகிறார்கள். மர்வானும் மற்றவர்களும் போரிட்டு இதற்கு தீர்வு காணலாம் என்று 656 ல் ‘ஒட்டகப் போர்’ நிகழ்த்துகிறார்கள். இப்போரில் அலி(ரலி) அவர்கள் வென்றுவிடுகிறார்கள். இந்த வெற்றியின் தொடராக அலி(ரலி) அவர்கள் மூ ஆவியாவுடன் சிஃப்ஃபின் என்ற இடத்தில் போரிடுகிறார்கள். இந்தப் போரில் வெற்றி தோல்வியின்றி இருவரும் மத்தியஸ்தர்களை வைத்து தீர்த்துக் கொள்ளலாம் என்று போரைக் கைவிடுகிறார்கள்.  
போருக்குப் பிறகு 658 ல் மூஆவியா அவர்களால் அம்ர் இப்ன் அல் ஆஸ் அவர் களும், அலி (ரலி) அவர்களால் அபு மூஸா அஷாரி அவர்களும் மத்தியஸ்தர் களாக அமர்த்தப்படுகிறார்கள். ஜோர்டானின் வடமேற்குப் பகுதியில் அத்ரூஹ் என்ற இடத்தில் மத்தியஸ்தர்கள் சந்தித்துப் பேசினார்கள். அம்ர் இப்ன் அல் ஆஸ் அவர்கள் அபு மூஸா அஷாரியிடம் அலி(ரலி) அவர்கள் மற்றும் மூஆவியா இருவரும் முதலில் பதவியை விட்டு விலகி விட்டு புதிய கலீஃபா ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு அலி(ரலி) அவர்களின் ஆதரவாளர்கள் ஒரு புரட்சியாளர் அலி(ரலி) அவர்களின் கலீஃபா தரத்தை நீக்கக்கோருவதா என்று கொந்தளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அலி(ரலி) அவர்கள் மத்தியஸ்தர்கள் கட்டுப்பாட்டிலிருந்து தான் விலகுவதாக கூறி விலகிக் கொண்டார்கள். இதுவரை அலி(ரலி) அவர்களின் முக்கிய ஆதரவாளர் களாக இருந்து அவர்களை ஆதரித்த கரிஜியாக்கள் (தமிழில்-விலகிப் போனவர்கள்) அவரை விட்டும் அவர் படையை விட்டும் விலகிவிடு கிறார்கள். இந்த செயல் அலி (ரலி) அவர்களை மிகவும் பலவீனப்படுத்தி யது. அந்த துரோகத்திற்கு 659 ல் நஹ்ரவான் என்ற இடத்தில் அலி(ரலி) அவர்கள் கரிஜியாக்களுடன் போரிட்டு வென்றார்கள். இருந்தாலும் பழைய குழப்பங்கள் தொடர்ந்தன. சிரியர்கள் பெரிதும் நேசித்த 
மூ ஆவியா அவர்களைப் போட்டி கலீஃபாவாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக