புதன், 17 டிசம்பர், 2014

செல்ஜுக்குகள் சரித்திரம் 4



இரண்டாம் கிலிக் அர்சலனின் மரணத்திற்குப் பின் அவர் மகன்களின் பதவிச் சண்டையில் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் என்ற மகன் மன்னரானார். அவரால் நீண்ட நாட்கள் பதவியில் நீடிக்க முடியவில்லை. அடுத்த சகோதரர் இரண்டாம் ரூக்னத்தீன் விரைவில் அவரை அகற்றி விட்டு ஆட்சியில் அமர்ந்தார். அமர்ந்த கையோடு கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ், அவர் மகன்கள் இஸ் ஸத்தீன் கெயுஸ்ரேவ், அலாத்தீன் கெயுஸ்ரேவ் ஆகியோரை பைஸாந்திய பேரரசுக்கு நாடு கடத்தினார். இரண்டாம் ரூக்னத்தீன் மலத்யா, அர்டுகிட்ச் மற்றும் ஹர்புத் ஆகிய நகரங்களைக் கைப்பற்றினார். எர்ஸுருமின் சால்துகிட் தலைமையகத்தை செல்ஜுக்குகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். மிகுந்த சிரமத்தில் ஆட்சி செய்த இவர் 1204 ல் மரணமடைந்தார். இவருக்குப் பின் மீண்டும் முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் ஆட்சியைக் கைப்பற்றினார்.  அந்த நேரத்தில் இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒன்று, கான்ஸ்டாண்டிநோபிள் நான்காம் சிலுவைப்போராளிகள் வசம் வீழ்ந்தது. இரண்டாவது, மங்கோலிய மன்னன் ஜெங்கிஸ்கான் சூறாவளி போல் தனது முதல் படையெடுப்பை நடத்தினார்.
                                முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் பதவியேற்றதும் லத்தீன் பகுதி கான்ஸ்டாண்டிநோபிள் இவர் வசம் வந்து மீண்டும் மத்திய அனடோலியா செல்ஜுக்குகளின் ஆதிக்கத்தில் வந்தது. தற்போது செல்ஜுக்குகளின் மாகாணம் முன்பை விட இருபுறமும் கடல் அமைந்து பலமானது. இது முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவின் முக்கியமான திட்டமாக கருதப்பட்டது. அடுத்து வெனிஷிய அல்டோப்ரந்தினியிடமிருந்து புத்திசாலித்தனமாக சண்டையிட்டு 1207 ல் மெடிட்டரேனியன் துறைமுக நகரமான அண்டால்யாவைக் கைப்பற்றினார். தென் மேற்கு துருக்கியில் அமைந்துள்ள அண்டால்யா நகரம் ரோம, பைசாந்திய சாம்ராஜ்ஜியங்களிலிருந்து மிகவும் புகழ் வாய்ந்த அழகான நகரம். சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டு, கோட்டையுடன் தோட்டங்களும் அமைந்திருந்தன. இங்கு ஒரு பெரிய புகழ்வாய்ந்த மசூதியும் கட்டப்பட்டது. தனது பொழுதுபோக்கை பெரும்பாலும் பைஸாந்திய அரண்மனையில் தன் மகன் இஸ்ஸத்தீன் கெய்கவுஸ், அலாவுத்தீனுடன் சென்று கழிப்பார். மேற்கத்திய கிறிஸ்தவ நட்பை பலவகையிலும் விரும்பினார். இது செல்ஜுக்குகளின் மேற்குப்புற வாணிபத்திற்கு பெரிதும் உதவியது. அண்டால்யாவைக் கைப்பற்றிய பிறகு, செல்ஜுக்குகளுக்கும், வெனிஷியர்களுக்கும் இடையில் முதல் வாணிப ஒப்பந்தம் கையெழுத்தானது.
                                 முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ், இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ், மூன்றாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் என்று வரிசையாக ஆண்டார்கள். முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் நிறைய கட்டிடங்களைத் தன் ஆட்சியின் போது கட்டினார். அதில் 1206 ல்  செல்ஜுக்குகளின் கட்டிடக்கலையை எடுத்துக்காட்டும் வகையில் கட்டப்பட்ட பிரமாண்டமான மருத்துவமனையும், தனது சகோதரி கெவ்ஹிர் நெசிபி ஹாதுன் நினைவால் கைசெரியில் கட்டப்பட்ட ‘சிஃப்டி மதரஸா’வும் மிகவும் புகழ் வாய்ந்தது. குறிப்பிடத்தக்க பல கட்டிடங்களை குருசெஸ்மி, டோகுஸ் டெர்பெண்ட் ஆகிய இடங்களில் கட்டினார். மரவேலைப்பாடு மிகுந்த அங்காரா மியூசியம் அழகானது. இஸ்னிக்கின் பைஸாந்திய சக்கரவர்த்தி முதலாம் தியோடர் லாஸ்கரிஸ் என்பவரிடம் அலாசஹிர் என்ற இடத்தை கைப்பற்ற நடந்த போரில் 1211 ல் முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் மரணமடைந்தார்.
                            இவருக்குப் பின் இவர் மகன் இஸ்ஸத்தின் கெய்கவுஸ் தந்தையின் வழியில் ஆட்சியை விரிவுபடுத்தியும், வாணிபத்தில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி ஆட்சி நடத்தினார். இவரும் இவர் சகோதரர் அலாவுத்தீன் கெய்குபாதும் நடத்திய நாற்பதாண்டு கால ஆட்சியில் செல்ஜுக் மாகாணம் அதிக பட்ச முன்னேற்றத்தைக் கண்டது. இஸ்ஸத்தின் கெய்கவுஸ் 1214 ல் நிரந்தரமாக கைப்பற்றிய கருங்கடலின் துறைமுக நகரமான ‘சினோப்’ பில் கப்பல் கட்டுமான வாணிபத்தை நிறுவினார். இதனால் சீனா, இந்தியா, பெர்ஷியா, க்ரீமியன் பகுதிகள் மற்றும் மேற்குப் புறங்களில் வாணிபத்தைப் பெறுக்கினார். சிலுவைப் போராளிகளால் கைப்பற்றப்பட்ட அண்டாலியா நகரம் மீண்டும் இஸ்ஸத்தின் கெய்கவுஸால் வெல்லப்பட்டது. செல்ஜுக்குகள் கருங்கடல் மற்றும் மெடிட்டரேனியன் கடல் பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மேலும், துணைகடல்களின் வழியாக வியாபாரங்களும் பெருகின.
                                  இஸ்ஸத்தின் கெய்கவுஸ் ஆட்சியில் செல்ஜுக்குகள் பல துறைகளில் முண்ணனியில் இருந்தனர். இராணுவம் மிகவும் கட்டுப்பாடுடன் இருந்தது. அரசியல் நிர்வாகம், வாணிபம் மற்றும் சிற்பக்கலை சிறந்தோங்கியது. இஸ்ஸத்தின் கெய்கவுஸ் ஒரு கவிஞராக இருந்தார். மேலும் பெர்ஷிய இலக்க ணம், சூஃபியிஸத்தில் மிகவும் ஆர்வமுள்ளவராகவும் இருந்தார். மஞ்சள் காமாலை நோயினால் மரணமடைந்து சிவாஸ் பகுதியில் தான் கட்டிய மருத்துவமனை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக