செவ்வாய், 23 ஜூன், 2015

அய்யுபிட்கள் வரலாறு 1

                                                              அய்யுபிட்கள் வரலாறு
கூ.செ.செய்யது முஹமது
                            எகிப்தை மையமாக வைத்து ஈராக்கைச் சேர்ந்த குர்திஷ் இன மன்னர் சலாவுத்தீன் அல் அய்யூபி அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாமியப் பேரரசு தான் ‘அய்யுபிட் பேரரசு’. 12, 13 ம் நூற்றாண்டுகளில் மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகளை ஆண்டார்கள். சலாவுத்தீன் அய்யூபி ஆரம்பத்தில் ஃபாத்திமிட் பேரரசில் வைசிராயராக இருந்தார். அய்யுபிட் பேரரசுக்கு ஆரம்ப தளம் அமைத்த நூருத்தீனுக்குப் பிறகு, இவர் மன்னரானார். மூதாதையர் நிஜாமுத்தீன் அய்யூப் பின் ஷாதி என்பவர் வட அர்மேனியாவில் ரவாதியா பழங்குடியினரின் ஒரு பிரிவினரான ஹதபனி பழங்குடியினத் தைச் சேர்ந்தவராவார். அங்கு அரசியலில் முக்கிய நபராக இருந்தார்.
                        ஷாதி அவர்கள் அரசியல் சூழ்நிலை மோசமானதால் அங்கிருந்து மகன் கள் நிஜாமுத்தீன் மற்றும் ஷிர்குஹ் உடன் ஈராக்குக்கு இடம் பெயர்ந்தார். இந் நிகழ்ச்சிகளை நாம் சலாவுத் தீன் அல் அய்யூபின் வரலாற்றில் பார்த்துவிட்டோம். சலாவுத்தீன் தான் வெற்றி பெற்ற பிரதேசங்களில் தன் உறவினர்களையும், அந்த பிரதேசங்களின் உள்ளுர் தலைவர்களையும் வைத்து ஆட்சி செய்தார். சலாவுத் தீன் இறந்த பிறகு, அலிப்போவை அஸ் ஸஹீரும், அவை மூத்த மகன் அல் அஃப்தல், பாலஸ்தீனும் லெபனானும் இணைந்த டமாஸ்கஸையும் ஆட்சி செய்தனர். 1193 ல் மோசூலைச் சேர்ந்த மஸ் உத், சின் ஜாரின் ஸங்கியுடன் இணைந்து (வட மொசபடோனியா) அதிகபட்ச அல் ஜசீரா பகுதிகளைக் கைப்பற்றினார். பெரிய வெற்றி காணும் முன் மஸ் உத் உடல்நலம் பாதிக்கப்பட்டு மோசூல் திரும்பிவிட்டார். பல அரசியல் சூழ்நிலைகள் மாறி 60 வயதி சலாவுத்தீனின் மகன் அல் ஆதில் என்பவர் பேரரசை பிரித்து தன் மகன்களுக்கு கொடுத்து அடுத்த 50 ஆண்டுகளுக்கு அய்யுபிட் பேரரசை நிலைபடுத்தினார். எகிப்தை அல் காமிலுக்கும், அல் ஜஸீரவை அல் அஷ்ரஃபுக்கும், அல் அவ்ஹதுக்கு தியார் பக்ரையும் பிரித்துக் கொடுத் தார். பின்னாளில் அல் அவ்ஹத் இறந்து போக அப்பகுதி அல் அஷ்ரஃபுக்கு வந்தது.
                        சலாவுத்தீன் இறந்த பிறகு, இரண்டாவது அய்யுபிட் சுல்தானாக அவரின் இரண்டாவது மகன் அல் மாலிக் அல் ஜீஸ் ஒஸ்மான் பின் சலாவுத்தீன் யூசுஃப் ஆட்சிக்கு வந்தார். ஏற்கனவே சலாவுத்தீன் தன் மகன்களுக்கு பிரித்துக் கொடுத்ததில் பல குழப்பங்கள் இருந்தன. இதற்கிடை யில் அல் அஜீஸ் 1193 முதல் 1198 வரை ஒட்டுமொத்தமாக சுல்தானாக இருந்தார். மோசூலில் சன்ஜார் தலைமையிலும், தென் ஈராக்கில் அர்துகித்கள் என்பவர்களாலும் புரட்சி ஏற்பட்டது. அல் அஃப்தலால் துரத்தப்பட்ட மந்திரிகளின் வேண்டுகோளுக்கிணங்க அல் அஜீஸ் இழந்திருந்த சிரியாவை மீண்டும் வென்றார். சிரியாவை இழந்த அல் அஃப்தல் சலாவுத்தீனின் சகோதரர் அல் ஆதிலின் உதவியை நாட அவர் சமதானப்படுத்தினார். சமாதானத்தை மீறி அல் அஃப்தல் செயல்பட இம்முறை 1196 ல் அல் ஆதில் அல் அஜீஸுடன் இணைந்து சிரியாவைக் கைப்பற்றினார். அல் அஃப்தல் சல்காதுக்கு தப்பி ஓடினார். பெயருக்கு அல் அஜீஸ் சுல்தானாக இருந்தாலும், சலாவுத்தீன் சகோதரர் அல் ஆதில் தான் டமாஸ்கஸில் அதிகாரத் தில் இருந்தார்.
                            அல் அஜீஸ் தன் ஆட்சியின் போது, எகிப்திலிருந்த புகழ் பெற்ற கிஸா பிரமிட்டை அழிக்க முயற்சித்தார். அது மிகப்பெரியதாக இருந்ததால் கைவிட்டு விட்டு மென்காயர் பிரமிட்டை அழித்தார். சரித்திரப்புகழ் வாய்ந்த பனியாஸ் மற்றும் சுபைதாஹ் கட்டிடங்களைக் கட்டினார். 1198 ல் ஒரு வேட்டையின் போது ஏற்பட்ட விபத்தில் அல் மாலிக் அல் அஜீஸ் இறந்து போனார்.
                            அல் அஜீஸுக்குப் பின் அவர் மகன் அல் மன்சூர் நாசிர் அல் தீன் முஹம்மது எகிப்தின் மூன்றாவது சுல்தானாக 12 வயதில் ஆட்சிக்கு வந்தார். அப்போது சலாவுத்தீனிடம் பணியாற்றிய அடபெக் என்னும் மம்லுக் அனுபவம் வாய்ந்த சலாவுத்தீனின் சகோதரர் அல் ஆதில் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று குழப்பம் விளைவித்தார். சலாவுத்தீனின் சிறிய தந்தை ஷிர்குஹ் சலாவுத்தீனின் மூத்த மகன் அல் அஃப்தல் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்றார். இதனால் அல் அஃப்தலுக்கும், அல் ஆதிலுக்கும் இடையே சண்டை மூண்டது. அல் அஃப்தல் டமாஸ்கஸில் தோல்வி யடைந்ததால், அல் ஆதில் கெய்ரோவில் நுழைந்து வெள்ளிக்கிழமை தொழுகையில் அல் மன்சூரின் பெயரை நீக்கி தன் பெயரை முன் மொழிய வைத்தார். அங்கிருந்து வெளியேறிய அல் மன்சூர் தன் சிறிய தந்தை அஸ் ஸஹீர் காஸி இருக்கும் சிரியாவின் அலிப்போ நகரத்திற்குச் சென்றார். அஸ் ஸஹீர் 1216 ல் தனக்குப் பின் தன் பிராந்தியத்தில் அல் மன்சூரை ஆட்சியாளராக ஆக்கினார். அதன் பிறகு அல் மன்சூரின் விவரங்கள் கிடைக்கவில்லை.
                               நிஜாமுத்தீன் அய்யூபின் மகனான அல் ஆதில் (முதலாம் ஆதில்) எகிப்து மற்றும் சிரியாவின் சுல்தானாக ஆட்சியில் அமர்ந்தார். இவரை மரியாதை கலந்து சைஃபுத்தீன் (உண்மையின் வாள்) என்றும் அழைத்தார்கள். சிலுவைப்போரின் போது ஃப்ராங்க்ஸ்கள் இவரை சபாதின் என்று அழைக்க இன்றும் மேற்கத்திய வரலாற்றில் இப் பெயர் நிலைத்திருக்கிறது. தன் சகோதரர் சலாவுத் தீனுடன் சேர்ந்து சமூக மற்றும் இராணுவத் திறமைகளைப் பெற்றவர் அல் ஆதில். அய்யுபிட்களின் ஆட்சி யில் சிறந்த தளபதியாகவும் இருந்தார். சிறிய தந்தை ஷிர்குஹ்ஹின் மூன்றாவது எகிப்தின் தாக்குதல் போது நூருத்தீன் ஸெங்கியின் படையில் அதிகாரியாக இருந்தார். நூருத்தீன் இறந்த பிறகு, 1174 ல் சலாவுத்தீனின் சார்பாக எகிப்தின் கவர்னராக இருந்து அதன் வளர்ச்சிக்கும், சிலுவைப் போராளிகளை திறம்பட எதிர்க்கவும் துணை புரிந்தார். சலாவுத்தீன் இறந்த பிறகு மோசூலில் கலவரம் செய்த இஸ்ஸத் தீனை அடக்கினார்.
                        சலாவுத்தீன் தனக்குப் பிறகு, மகன் அல் அஃப்தல் தான் சுல்தானாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரின் மற்ற மகன்கள் அல் அஃப்தலின் தலைமையை எற்க தயாராய் இல்லை. அல் ஆதில் அவர்கள் குறிப்பாக அல் அஜீஸுக்கும், அல் அஃப்தலுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த முயன்றார். அல் ஆதிலுக்கு அல் அஃப்தல் சுல்தானாக தகுதி இல்லாதது போல் தோன்றியதால், அவர் அல் அஜீஸுக்கு ஆதரவளித்தார். எதிர்த்த உறவினர்கள் அனைவரையும் வெற்றி கொண்டு 1201 ல் சுல்தானாக ஆட்சி அமைத்தார். மிகச் சிறந்த அய்யுபிட் சுல்தானாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக எகிப்தையும், சிரியாவையும் ஆட்சி செய்தார், பின்னால் ஆட்சிக்கு வந்த இவர் மகன் அல் காமிலும் சிறப்பாக ஆட்சி செய்தார். அல் ஆதில் ஆட்சிக்கு வந்த போது 55 வயதிற்கு மேலாகி விட்டது. சலாவுத்தீன் காலத்திலிருந்து சிலுவைப் போராளிகளுடன் போரிட்டு வந்ததால் ஆட்சி நடத்த போதிய வருவாய் இல்லாமல் இருந்தது. முதலில் வருவாயைப் பெருக்க திட்டமிட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இதனால் புதிய நாணயத்தை வெளியிட்டு, புது வரிகளையும் விதித்தார். இச் சூழ்நிலையில் எகிப்தில் பெரிய பூகம்பமும், நைல் நதியில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. இதையெல்லாம் திறமையாக சமாளித்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தினார்.
                            புதிய சிலுவைப் போருக்கு வித்திட்டிருந்த மேற்கத்தியர்களுடன் மெடிட்டரேனியன் நகரங்களில் வாணிபத் தொடர்பை ஏற்படுத்தி திசை மாற்றினார். இதில் அவருக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. ஃப்ராங்கிஷ் கடற்படையினர் ரொஸட்டாவிலும், டமைட்டாவிலும் அவ்வப்போது தாக்குதல் நடத்தினர். மேலும் குடும்பப்பகை வளராமல் இருப்பதற்கு தன் மகள் தைஃபா கதூனை சலாவுத்தீனின் மகன் அலிப்போவின் அஸ் ஸஹீர் காஸிக்கு 1212 ல் மணமுடித்துக் கொடுத்தார். டமாஸ்கஸில் சிறந்த அரண்மனையைக் கட்டினார். 1217 ல் எதிர்பாராத தருணத்தில் அக்ரியில் சிலுவைப் போராளிகள் வந்திரங்கினார்கள். 72 வயதில் தயாராய் இல்லாத தன் படையை அவசரமாகத் திரட்டி பாலஸ்தீன் சென்றார். அது அவ்வளவாக வெற்றி தராத நேரத்தில் அடுத்த சிலுவைப்படை டமெய்டாவில் வந்திருக்கிறது என்ற செய்தி கிடைத்தது. ஏற்கனவே உடல்நலமில்லாதிருந்த அல் ஆதில் 1218ல் காலமானார். அவருக்குப் பிறகு அவர் மகன் மாலிக் அல் காமில் ஆட்சிக்கு வந்தார். அல் ஆதிலுன் உறவினர்கள் பல பகுதிகளை துண்டாடினார்கள். டமாஸ்கஸ் மட்டும் அய்யுபிட் சுல்தானை நிலை நிறுத்தியது.
                        அய்யுபிட்களின் எகிப்திய சுல்தானாக அல் மாலிக் அல் காமில் ஆட்சியில் அமர்ந்தார். தந்தை வேறொரு பகுதியிலிருக்க மார்டினில் ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சினைக்கு தந்தையின் வேண்டுகோளின்படி தலைமை ஏற்றார். எகிப்தின் வைசிராயராக இருந்தார். அப்போது அல் ஆதிலின் இன்னொரு மகன் அல் முஃஅஸ்ஸிம் இசா டமாஸ்கஸின் இளவரசராய் இருந்தார். அல் ஆதில் கெய்ரோவின் அரண்மனை கட்டும் பணியில் கவனமாய் இருந்த போது, அல் காமில் ஏறக்குறைய சுல்தான் போல் செயல்பட்டார். அதிகாரமிக்க மந்திரி இப்ன் ஷுக்ரை பதவியிலிருந்து நீக்கினார். அல் ஆதில் இற்ந்த போது அல் காமில் எகிப்தையும், அல் முஃஅஸ்ஸிம் பாலஸ்தீன் மற்றும் ட்ரான்ஸ்ஜோர்டானையும், மூன்றாவது சகோதரர் அல் அஷ்ரஃப் மூசா சிரியா மற்றும் அல் ஜஸீராவையும் நிர்வாகத்தில் வைத்திருந் தனர். ஐந்தாவது சிலுவைப்படை எகிப்தை தாக்க துவங்கியது.
                        அல் காமில் தலைமையில் டமெய்டாவில் சிலுவைப்படைகளை எதிர் கொண்டார். இதற்கிடையில் ஹக்கரி குர்திஷ் கமாண்டரான இமாதத்தீன் இப்ன் அல் மஷ்துப் குழப்பம் விளைவித்து ஏறக்குறைய அல் காமிலை ஆட்சியை விட்டு தூக்க இருந்தார். அதிலிருந்து தப்பித்து தன் மகன் அல் மஸ் உத் ஆட்சி செய்யும் ஏமனுக்கு தப்பிச் செல்ல இருந்தார். அதற்குள் சகோதரர் முஃஅஸ்ஸிம் சிரியாவிலிருந்து வந்து குழப்பத்தை சரி செய்தார். இதற்கிடையில் சிலுவைப்போரைத் தடுக்க பலவழியிலும் முயற்சி செய்தார். அனைத்தும் நிராகரிக்கப்பட்டது. கடுமையான பஞ்சமும், நைல் நதி வற்றிப் போனதும் அல் காமிலால் டமெய்டாவைக் காப்பற்ற முடியவில்லை. அல் மன்சூரா கோட்டையிலிருந்து துருப்புகளை விலக்கிக் கொண்டு மீண்டும் ஜெருசலத்தை விட்டுக் கொடுப்பதாகவும் சிலுவைப்படை எகிப்தை விட்டு வெளியேர வேண்டும் என்று சமாதானத்திற்கு முயன்றார். இம்முறையும் நிராகரிக்கப்பட்டு சிலுவைப்படை கெய்ரொவிற்கு படையெடுத்தது. அல் காமில் புத்திசாலித்தனமாக மக்களை பத்திரப்படுத்திக் கொண்டு, அப்போதைய நைல் நதியின் தடுப்புகளைத் திறந்து வெள்ளம் உண்டாக்கினார். வேறுவழியின்றி எட்டு ஆண்டு அமைதிக்கு ஒத்து வந்தார்கள் டமெய்டாவையும் திருப்பி தந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக