புதன், 22 ஜூலை, 2015

ஐக்கிய அரபு அமீரக வரலாறு 2

முன்பு இப்பகுதிகளை பிரிட்டிஷார் கடல்கொள்ளையர்களின் இடம் என்று குறிப்பிட்டார்கள். இப்பகுதிகள் ஆங்கிலத்தில் ஷெய்க்டம் (SHEIKHDOM) என்று அழைக்கப்பட்டன. அதாவது பூகோள அமைப்புப்படி அந்தந்த பகுதிகளை ‘ஷெய்க்’ என்னும் அவர்கள் தலைவர்கள் பொறுப்பாக இருந்து நிர்வகித்து வந்தார்கள். இது அடிப்படையில் மன்னராட்சிக்கு உண்டான அதிகாரமாகிறது. இந்தப்பகுதில் பிரிட்டிஷ் கப்பல்கள் தாக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டது. குறிப்பாக ‘கவாசிம்’ மற்றும் ‘ஜோஸ்மீஸ்’ கடற்கொள்ளையர்கள் (இவர்கள் ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமாஹ் பகுதிகளின் ‘அல் கசிமீ’ என்னும் ஆட்சியாளர்கள்) பிரிட்டிஷாருக்கு பெரும் தொல்லையாக இருந்தார்கள். 1797 ல் அல் கசிமீ குடும்பத்தினர் தொடர்ந்து பிரிட்டிஷ் கப்பல்களைத் தாக்கினார்கள். பிரிட்டிஷின் ‘பஸ்ஸீன் ஸ்னா’ கப்பலைப்பிடித்து வைத்துக் கொண்டு, பணயத்தொகை பெற்றுக்கொண்டு இருநாட்கள் கழித்து விடுதலை செய்தார்கள். புஷைர் பகுதியில் ‘வைபெர்’ என்ற கப்பலைத்தாக்கினார்கள். இந்த தொடர் தாக்குதல்கள் ராஸ் அல் கைமாஹ், அஜ்மான், ஷார்ஜா ஆகிய ஆட்சியாளர்கள் ஷெய்க் சுல்தான் பின் சக்ர் அல் கசிமீ என்பவர் தலைமையில் 1823 லும் அனைவரின் துறைமுகப்பகுதிகளிலும் நடந்தன. இத்தாக்குதல்களைப் பற்றி தற்போதைய சுல்தான் பின் முஹம்மது அல் கசிமீ அவர்கள் ‘தி மித் ஆஃப் அராப் பைரசி இன் தி கல்ஃப்’ என்று 1986 ல் ஒரு புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். பின்னால் இன்ஷா அல்லாஹ் சந்தர்ப்பம் கிடைத்தால் அப்புத்தகத்தை தமிழில் தருகிறேன். பிரிட்டிஷாரின் இந்திய வாணிபக் கப்பல்கள் ராஸ் அல் கைமாஹ்வை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து தான் சென்றன. இப்பிரச்சினையால் பிரிட்டிஷார் 1809 மற்றும் 1819 ல் ராஸ் அல் கைமாஹ்வைத் தாக்கினார்கள். இது சுற்றியுள்ள மற்ற ஷெய்குகளின் பிரதேசங்களான ஷார்ஜா, துபாய், அஜ்மான், அபுதாபி ஆகியவற்றைப் பாதித்ததால் 1820 ல் அப்பகுதி அனைத்து ஷெய்குகளும் கூடி பிரிட்டிஷுடன் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டார்கள். இது 1843 வரை செல்லுபடியானது. இப்பகுதிகளில் முத்துக்குளிப்பு முக்கிய தொழிலாக இருந்ததால் 1853 ல் நிரந்தரமாக ஒரு ஒப்பந்தம் போட்டார்கள். 1847, 1856 களில் அடிமை விற்பனைக்காக சில ஒப்பந்தங்களைப் போட்டார்கள். அச்சமயத்தில் ஐக்கிய அரபு அமீரகப் பகுதிகளின் மீது ஐரோப்பிய சக்திகள் அதிக ஆர்வம் காட்டின. குறிப்பாக ஃப்ரான்சும், ரஷ்யாவும். கடற்கொள்ளையர்களின் தொந்தரவிலிருந்தும், மற்ற வெளிநாட்டவர்களை தள்ளி வைக்கவும் திட்டமிட்ட பிரிட்டிஷ் இப்பகுதி ஷெய்குகளை அழைத்து, அப்பகுதிகளை தாங்கள் கடல் மற்றும் நிலப்பரப்புகளிலிருந்து வரும் ஆபத்துகளிலிருந்து தாங்கள் பாதுகாப்பதாகவும், பதிலுக்கு தங்களின் அனுமதியில்லாமல் எந்த வெளிநாட்டிடமும் உறவு வைத்துக் கொள்ளக்கூடாதென்றும் ஒரு ஒப்பந்தத்தையும், அவர்களுக்கான மற்ற உதவிகளையும் செய்வதாக ஒத்துக் கொண்டார்கள்.  ஒப்பந்தம் பிடிக்காததால் ரம்ஸ் மற்றும் ஜஸீராஹ் அல் ஹம்ராஹ் ஷெய்குகளை ராஸ் அல் கைமாஹ் மக்கள் ஆட்சியிலிருந்து வெளியேற்றினார்கள். 
வெளி எதிரிகளிடமிருந்தும் அமீரகத்தைப் பாதுகாக்க பிரிட்டிஷாரால் போடப்பட்ட இந்த பிரத்தியேக ஒப்பந்தத்தால் அது இப்பிரதேசத்தில் உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தது. மிகச் சிறப்பாக செயல்பட்டு உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பும், வருமானத்தையும் பெற்றுக் கொடுத்த முத்துக்குளிப்பு வாணிபம். ஜப்பானியர்கள் கண்டுபிடித்த செயற்கை முத்தினால் பாதிக்கப்பட்டது. மேலும் இரண்டாம் உலகப்போருக்குப் பின் பிரிட்டிஷ் இந்தியா பெர்ஷிய அரபு முத்துக்களுக்கு கூடுதல் சுங்க வரியை விதித்தது. இதனால் முற்றிலும் முத்துக்குளிப்பு இந்த பகுதிகளில் கைவிடப்பட்டது. 1958 ல் உம் ஷைஃப் பகுதியிலும், 1960 ல் பாலைவனமான முர்பான் பகுதியிலும் எண்ணெய்வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் எண்ணெய் ஏற்றுமதி கப்பல் 1962 ல் அபுதாபியிலிருந்து புறப்பட்டது. அதேபோல் துபாயிலும் 1969 லும் எண்ணெய் முதல்முறையாக ஏற்றுமதி ஆனது. எண்ணெய் வருமானம் அதிகரிக்க இரு அமீரக ஷெய்குகளும் தங்கள் பகுதிகளை வளப்படுத்தினார்கள். 1968 ல் பிரிட்டிஷ் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாகக் கூறி இராணுவத்தை அழைத்துக் கொண்டது. இப்பிரதேசங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்றன. இவ் ஒப்பந்தம் 1971 டிசம்பரில் ஏழு அரபு அமீரகங்களும் சுதந்திரமாகும் வரை இருந்தது. PCL எனப்படும் பெட்ரோலிய நிறுவனம் சுதந்திரமாக அப்பகுதியில் செயல்பட அழுத்தம் கொடுக்க கடைசியாக ஃபுஜைய்ராஹ் அமீரகம் 1952 ல் சுதந்திரம் அடைந்தது. 1968 சுதந்திரத்திற்குப் பிறகு, அபுதாபி, துபாயுக்கு இடையில் அர்கூப் அல் செதிராஹ் பாலைவனக் கூடாரத்தில் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யானும், ஷெய்க் ராஷித் அவர்களும் அனைத்து அமீரகங்களும் ஒன்றிணைவது பற்றி பேசினார்கள். இவர்கள் கதார் மற்றும் பஹ்ரைனையும் கூட அமீரகத்தில் இணைக்க முயன்றார்கள். பிரிட்டிஷார் இடையில் புகுந்து இந்த ஒன்பது அமீரங்களின் கூட்டைக் கலைக்க கதாரும், ராஸ் அல் கைமாஹ்வும் கூட்டத்தைப் புறக்கணித்தன. இரண்டாண்டுகளாக பலகட்டப் பேச்சில் ஒரே அடியாக பஹ்ரைனும், கதாரும் வெளியேற அமீரகங்கள் ஏழும் ஒன்றுகூடி 1971 ஜூலையில் ஐக்கிய அரபு அமீரகங்கள் என்று சர்வதேச நாடுகளுடன் சேர்ந்தன. முதலில் சேராமல் இருந்த ராஸ் அல் கைய்மாஹ் அமீரகம் பின்னர் 1972 பிப்ரவரியில் சேர்ந்து கொண்டது. இதனால் ஆத்திரம் கொண்ட ஈரான் அபு மூசா மற்றும் துன்ப்ஸ் பகுதிகளை ராஸ் அல் கைமாஹ்விடம் இருந்து கைப்பற்றிக் கொண்டது. 
ஐக்கிய அரபு அமீரகம், கதார், பஹ்ரைன் மற்றும் ஒமான் பகுதிகளில் 1969 வரை இந்திய நாணயங்களே புழக்கத்தில் இருந்தன. அந்நாடுகள் தங்கள் சொந்த நாணயம் வெளியிட்ட பிறகு, இந்திய நாணயம் புழக்கத்திலிருந்து மறைந்தன. ஐக்கிய அரபு அமீரகங்களுக்கு ஓமானுடன் அபுதாபியின் தெற்குப் பகுதியான புரைய்மி என்ற பாலைவனப் பகுதியுடன் இருந்த எல்லைப் பிரச்சினை சரி செய்யப்பட்டது. மேலும் ஒமானுடன் இருந்த இரு எல்லைப் பிரச்சினைகளையும் ஐக்கிய அரபு அமீரகங்கள் 1999 ல் சரி செய்து கொண்டது. சௌதி அரேபியாவிடம் சிறு எல்லைப் பிரச்சினை இன்னும் இருக்கிறது. அமெரிக்க தாக்குதலான 9/11 க்கு அல் காயிதா என்ற அமைப்புக்கு ஐக்கிய அரபு அமீரகங்கள் தான் பொருளாதார தளமாக இருந்ததாக அமெரிக்கா கூறியது. அதற்கு அமீரகங்கள் அமெரிக்காவுக்கு பெரும் ஒத்துழைப்பு கொடுத்து அல் காயிதா அமைப்பின் தொடர்புகளாக கருதப்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கியது. ஐக்கிய அரபு அமீரகங்களுக்கு 1994 லிருந்து அமெரிக்காவுடனும், 1995 லிருந்து ஃப்ரான்சுடனும் இராணுவக்கூட்டு உள்ளது. மேலும் அமெரிக்கா 2001 ல் ஆப்கானிஸ்தான் மீது நடத்திய போருக்கும், 2003 ல் ஈராக் மீது நடத்திய போருக்கும் ஐக்கிய அரபு அமீரகங்கள் உதவி புரிந்தன. உலகத் தீவிரவாதத்தை எதிர்த்து அமெரிக்கா நடத்தும் போருக்கு அபுதாபியின் வெளிப்புறத்தில் அல் தஃப்ரா என்ற இடத்தில் அமெரிக்காவுக்கு விமானதளம் அமைத்துக் கொடுத்துள்ளது. 2004 நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகங்கள் ஜனாதிபதி ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யான் மரணமடைய ஏழு அமீரகங்களின் சிறப்புக்குழு அவர் மகன் ஷெய்க் கலீஃபா பின் ஸாயெத் அல் நஹ்யானை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது. துணை ஜனாதிபதியாக இருந்த துபாயைச் சேர்ந்த ஷெய்க் மக்தூம் பின் ராஷித் அல் மக்தூம் 2006 ல் மரணமடைய அவரது இளைய சகோதரர் பட்டத்து இளவரசர் ஷெய்க் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஐக்கிய அரபு அமீரகங்களுக்கு துணை ஜனாதிபதியாகவும், துபாய் அமீரகத்தின் ஆட்சியாளராகவும் ஆனார். 2006 ல் துபாய் அமீரகத்துக்குச் சொந்தமான ‘துபாய் போர்ட்ஸ் வேர்ல்ட்’ என்ற நிறுவனத்துக்கு அமெரிக்காவின் ஆறு துறைமுகங்களை நிர்வகிக்கும் வாணிபம் கிடைத்தது. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகங்கள் 9/11 தாக்குதலில் ஈடுபட்ட இருவருக்கு வசிப்பிடமாக இருந்ததாகக் கூறி அமெரிக்கா அவ்வாணிபத்தை தடை செய்தது. 2011 ல் தற்போதைய ஜனாதிபதியையும், துணை ஜனாதிபதியையும் ‘5 பேர் கொண்ட குழு குடியரசு முறையை எதிர்த்தது. அவர்களை கைது செய்து விசாரணை செய்வதை உலகநாடுகளும், மனித உரிமை குழுக்களும் கண்காணித்ததால் ஐவர்குழுவை மூன்றாண்டு சிறைதண்டனைக் கொடுத்தது. ஆனால் ஜனாதிபதி ஷெய்க் கலீஃபா பின் ஸாயெத் பின் அல் நஹ்யான் மன்னித்து விடுதலை செய்தார். இதுவரை அல் நஹ்யான் குடும்பத்தில் எட்டு ஆட்சியாளர்கள் கொல்லப்பட்டு, ஐந்து ஆட்சியாளர்கள் ஆட்சியை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள்.   
இதிலிருந்து சில அமீரகங்களின் வரலாறைப் பார்ப்போம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக