ஞாயிறு, 19 ஜூலை, 2015

மங்கோலியர்கள் வரலாறு 3

இவர் ஒரு பகுதியை வெற்றி கொண்டால் அந்த செய்தி உடனே அடுத்துள்ள பகுதிகளுக்கு விரைவில் தெரியப்படுத்தி விடுவதில் குறியாக இருப்பார். ஒருவேளை ஏதாவது ஒரு எதிரி தன்னுடன் தைரியமாகப் போரிட்டால், இறுதியில் அவர்களை பொது மக்களின் முன்னிலையில் வைத்து கடுமையான முறையில் தண்டித்து பார்ப்பவருக்கு பயத்தை ஏற்படுத்துவார். நூற்றாண்டுகளுக்கும் மேலாக மலை சூழ்ந்த பகுதிகளுக்குள்ளேயே வாழ்ந்த ஒரு கூட்டத்தின் மனிதனிடத்திலிருந்து வந்த வீரம் கண்டு உலகம் இன்றளவும் வியக்கிறது. ஆனால், அது சிறு வயதிலிருந்து ஆத்திரத்தாலும், அவமானத்தினாலும் சமுதாயத்தின் மீது வந்த கோபம். நாடோடிக் கூட்டத்தின் தலைவனான தன் தந்தையைக் கொன்று, இளவயதிலேயே தன்னை அனாதையாக்கிய வேதனையின் வெளிப்பாடு. அந்த கோபத்தையும், வேதனையும் இறக்கி வைக்க அவர் தேர்ந்தெடுத்த இடம் அந்த மலைசூழ்ந்த பகுதியின் வெளிப்புறத்தில் பூமி எங்கும் பரவியிருந்தது.
மற்ற இராணுவங்கள் இரும்பாலான பீரங்கியை பயன்படுத்தி வந்த நேரத்தில் ஜெங்கிஸ்கான் பித்தளையாலான பீரங்கியை எந்த விதமான தட்பவெப்ப சூழ் நிலையிலும் பயன்படுத்தச்செய்தார். மங்கோலியர்கள் எந்த ஒரு நகரத்தில் நுழையும் முன் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் போல் நுழைவார்கள். நகரத்தின் உள்ளே இருக்கும் உளவாளிகளால் சரணடைந்து விடுவது நல்லது என்பதுபோல் ஆட்சியாளருக்கு அறிவுரை சொல்லப்படும். பெரும்பாலும் ஐரோப்பிய வைக்கிங்குகள் போல் கொள்ளையடித்து விட்டுத் திரும்பி விடுவார்கள். தன் ஆட்சியின் போது ஒன்றரை மில்லியன் பழங்குடியின மக்களுக்கும், தன்னால் வெற்றி கொள்ளப்பட்ட இரண்டு மில்லியன் மற்ற நாடோடிக் கூட்ட மக்களுக்கும் ஆட்சியாளராக இருந்தார். நீண்ட மேற்கத்திய தாக்குதலுக்குப் பிறகு, 1225 ல் மங்கோலியா திரும்பினார். பின் தனது கவனத்தை மீண்டும் வட சீனாவின் மீது திருப்பினார். ஏற்கனவே ஸி ஸியா மாகாணம் வெற்றி கொள்ளப்பட்ட போது ஒப்புக்கொண்ட ஆண்டு கப்பத் தொகையை ஸி ஸியா மன்னன் கட்ட மறுத்தான். மேலும் இம்முறைப் போரிட்டால் மங்கோலியர்கள் வெல்லமுடியாது என்ற கருத்தில் இருந்தான். ஜெங்கிஸ்கான் இந்த முறை எப்படியாவது ஸி ஸியாவை குறையில்லாமல் வெற்றி கொள்ள எண்ணினார். 180,000 வீரர்களுடன் கடுமையான குளிரில் உறைந்து போயிருந்த மஞ்சள் ஆற்றில் போரிட்டார். மிகுந்த உயிர் சேதம் ஏற்படுத்தி, பல நகரங்களை அழித்து வெற்றி பெற்றார். 1227 ல் ஒரு வேட்டையின் போது குதிரையிலிருந்து முறையில்லாமல் விழுந்ததில் பலத்த காயமுற்று சில நாட்களில் இறந்து போனார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இறந்த இடத்திலல்லாமல் வேறு இடத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டது.
தான் இறப்பதற்கு முன்பே தன் மகன்கள் குறிப்பாக சகடாய், ஜோச்சி இருவரும் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் என்று எண்ணினார். இளைய மகன் தோல்யூ மிகச் சிறிய வயது அதனால் அவர் ஆட்சிக்கு உகந்தவர் அல்ல. பேரரசை இரண்டாகப் பிரித்து இருவருக்கும் கொடுத்து விடலாமா என்று கூட யோசித்தார். ஆரம்பத்திலேயே மிகவும் முரட்டுத்தனமுள்ள சகடாய் தான் எக்காரணம் கொண்டும் ஜோச்சிக்குக் கட்டுப்பட மாட்டேன் என்று கூறிவிட்டார். இறுதியில் தனக்குப் பின் சகடாய் தான் ஆள் வேண்டும் என்று முடிவெடுத்தார். ஜெங்கிஸ்கான் உயிரோடு இருக்கும் போதே ஜோச்சி இறந்து போனார். ஜெங்கிஸ்கான் தான் விஷம் வைத்துக் கொன்றார் என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஜெங்கிஸ்கானின் இறப்பிற்குப் பிறகு, மங்கோலியர்கள் கூடி அடுத்த தலைவராக ஜெங்கிஸ்கானின் இரண்டாவது மகன் சகடாய் என்பவரைத் தேர்ந்தெடுத்தனர்.
சகடாய் புகாரா பகுதியில் சிலரின் ராஜதுரோகத்தைத் திறமையாக சமாளித்தார். ட்ரான்ஸாக்சியானாவில் ஜுமிலத் உல் முல்க் என்னும் முஸ்லீம் மந்திரியைத் தான் அமர்த்தி இருந்தார். இவர் காலத்தில் மசூதிகளையும், கல்லூரிகளையும் கட்டினார். தனித்திருந்த அல் மலிக் என்ற இடத்தை தலைநகரமாக ஆக்கி இருந்தார். 14 ஆண்டுகள் ஆட்சி செய்த இவர் கரகோரத்தில் இறந்து போன பிறகு, உடனடியாக இவர் மனைவி துராகினா ஆட்சிக்கு சில காலம் பொறுப்பேற்றார். சகடாயின் மகன் முடுகன், பமியன் படையெடுப்பின் போது இறந்து போனார். இன்னொரு மகன் பைதர், உறவினர் பூரியுடன் ஐரோப்பிய படையெடுப்பில் ஈடுபட்டார். மொகலாய மன்னர் பாபர் சகடாயின் வழிமுறையில் வந்தவரென்று ‘பாபர் நாமா’ வில் குறிப்பிடப்பட்டுள்ளது. (அதாவது சகடாய் மகன் முடுகன், முடுகன் மகன் யெ சுந்தவா கான், யெசுந்தவா கான் மகன் பரக்கான், பரக்கான் மகன் தவாகான், தவாகான் மகன் ஐசன்புகா கான், ஐசன்புகா கான் மகன் துக்ளக் திமீர் கான், துக் ளக் திமூர் கான் மகன் கிஸ்ர் க்வாஜாஹ் கான், கிஸ்ர் க்வாஜாஹ் கான் மகன் முஹம்மது கான், முஹம்மது கான் மகன் ஷேர்அலி ஆகுல்தீன், ஷேர் அலி ஆகு ல்தீனின் மகன் வயிஸ் கான், வயிஸ்கான் மகன் யூனுஸ் கான், யூனுஸ் கானின் மகன் பாபர் என்று)
வட சீனாவும், பெர்ஷியாவின் பகுதிகளும் மங்கோலிய ஆட்சியாளர்களின் குடும்ப பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. இன்னொரு சகோதரர் ஒகிடாய் கரகோரத்தை மங்கோலியர்களின் நவீன தலைநகரமாக்கினார். ஜெங்கிஸ்கானின் மூன்றாவது மகனான இவர் தந்தையுடன் பல படையெடுப்புகளில் கலந்து கொண்டார். 17 வயதில் ஜமுகா இராணுவத்திற்கு எதிராக தோல்வியுற்று படுகாயம் அடைந்த இவரை தந்தையின் சகோதரமுறை உறவினர் போரோகுலா காப்பாற்றினார். ஜெங்கிஸ்கான் இவருக்கு ஜலயிர், பெசுட், சுல்டுஸ், கோங்க்கடன் ஆகிய பழங்குடிப் பகுதியை நிர்வகிக்கக் கொடுத்தார். ஜெங்கிஸ்கானின் விருப்பப்படி ஜலயிரின் தலைவர் இல்லுகெய் ஓகிடாயின் ஆசிரியராக இருந்தார். ஓகிடாய் சகோதரர்களு டன் முதல்முறையாக ஜின் பேரரசை எதிர்த்து தனியாகப் போரிட்டார். ஓகிடாயும், சகடாயும் கிழக்கு பெர்ஷியாவில் ஒத்ரர் என்ற நகரத்தை ஐந்து மாதமாக முற்று கையிட்டார்கள். க்வாரிஸ்மிட் பேரரசுக்கு பொறுத்தமான ஒருவரை பொறுப்பாக்க இருந்த போது, சகடாயும்,ஜோச்சியும் அதற்கு கை கலப்பில் மோதிக் கொண்டார்கள். ஜெங்கிஸ்கான் ஓகிடாயை அதற்குப் பொறுப்பாக்கினார். ஓகிடாயும் தந்தையைப் போலவே இராணுவத்திலும், நிர்வாகத்திலும் திறமையாக இருந்தார். இளைய சகோதரர் தோல்யூ இறந்த போது மிகவும் துயரமடைந்தார். ஓகிடாய் நோய்வாய்ப்பட்ட போது ஷாமானிய வழக்கப்படி அவர் உயிரைக்காக்க தோல்யூ விஷம் அருந்தி மரணமடைந்தார். பின்னாளில் ஓகிடாய் மதுப் பழக்கத்திற்கு அடிமை ஆனார். ஓகிடாய்க்கு போரக்சின், டூரிஜின், முகா, ஜச்சின் என்ற மனைவிகளும், எண்ணற்ற சட்டபூர்வமில்லாத (வைப்பாட்டிகள்) மனைவிகளும், ஏழு மகன்களும் இருந்தார்கள்.
கரகோரம் நகரம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தது. 1253 ல் அங்கு வருகைதந்த ஒரு கிறிஸ்தவ துறவி (அவர் வில்லியமாகவோ அல்லது ருப்ருகிஸ் ஆகவோ இருக்கலாம்) கரகோரத்தில் நகரத்தின் சுவர்கள் பலமாக உயர்வாக அமைந்திருந்ததாகவும், செவ்வக வடிவத்தில் பெரிய அரண்மனையும், செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகள், அழகாக அமைக்கப்பட்ட தெருக்கள், பனிரெண்டு ஷாமானிஸ்ட் புனித ஸ்தலங்கள், இரண்டு மசூதிகள் மற்றும் நெஸ்டோரியன் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் இருந்ததாகக் கூறுகிறார் ஜெங்கிஸ்கான் கொள்ளையடிப்பதிலும், நகரங்களைத் தாக்கி தனது வீரத்தை பரப்புவதிலுமே வாழ்நாளை செலவழித்தார். ஆனால், ஒக்டாய் தலைநகரத்தை மையமாக்கி ஆட்சி அதிகாரத்தில் கவனம் செலுத்தினார். மேலும் சீனாவின் பகுதிகளையும் கொரியாவையும் வென்றார். ஜெங்கிஸ்கான் உயிரோடிருக்கும் போது மூத்த மகன் ஜோச்சியை ஐரோப்பாவை வென்றெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், ஜுச்சி ஜெங்கிஸ்கானுக்கு முன்பே மரணமடைந்து விட்டார். ஒகிடாய் தந்தையின் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக ஜோச்சியின் மகன் படுவை மேற்கு நோக்கி சென்று ஐரோப்பாவை வெல்ல கேட்டுக் கொண்டார். படு 1236ல் வடக்காகச்சென்று ரஷ்யாவில் வோல்கா என்ற இடத்தை வென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக