வியாழன், 6 ஆகஸ்ட், 2015

சிலுவைப்போர் 6

இரண்டாம் சிலுவைப் போர்- இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதம்கூ.செ. செய்யது முஹமது   
எடிஸ்ஸா நகரம் முஸ்லீம்கள் வசம் போனதை அறிந்த போப் மூன்றாம் ஈஜீனியஸ் ஐரோப்பாவில் இரண்டாம் சிலுவைப் போருக்கு கூக்குரலிட்டான். இதை செவியேற்ற ஐரோப்பா சக்திவாய்ந்த படையை தயார் செய்தது. அப்படைக்கு ஜெர்மனியின் பேரரசர் மூன்றாம் கொனார்டும், ஃப்ரான்சின் மன்னன் ஏழாம் லூயிஸும் தலைமை தாங்கினார்கள். ஐரோப்பாவின் முக்கிய மாகாணங்கள் கலந்து கொண்ட இரண்டாம் சிலுவைப்போர் அவர்களுக்கு பெரும் தோல்வியில் முடிந்தது. போப் ஐபீரிய தீபகற்பத்தையும், மூர்ஸ்களின் பிரதேசங்களையும் கைப்பற்ற சிலுவைப்படைகளின் தலைவர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். ஐரோப்பாவிலிருந்து வரும் வழியில் பல இடங்களை கொடுமையான முறையில் கொன்று வென்றார்கள். கொள்ளையடிக்கும் பொருள்கள் எங்களுக்குச் சேர வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் பேரில் போர்ச்சுகீஸிய மன்னன் முதலாம் அஃபோன்ஸோவுடன் கூட்டு சேர்ந்து லிஸ்பனில் போரிட்டார்கள். சில மாதங்களுக்குப் பிறகு, அதன் மூர்ஸ் ஆட்சியாளர் நகரில் உணவுத் தட்டுப்பாடு நிலவியதால் சரணடைவதாக ஒப்புக் கொண்டார். லிஸ்பனைப் பிடித்தார்கள். அங்கிருந்து கிளம்பிய சிலுவைப் படைகள் வழியில் சண்டாரீம், சின்ட்ரா, அல்மதா, பல்மேலா மற்றும் செதூபல் ஆகியவற்றைக் கைப்பற்றினார்கள். பிடிக்கப்பட்ட இடங்களில் சில சிலுவைப்படை வீரர்கள் அங்கேயே தங்கிக் கொண்டார்கள். ஃப்ரான்ஸ், கடலான், ஜினோயிஸ் என்று கலப்படமாக இருந்த இன்னொரு சிலுவைப்படை வளமான நகரமான அல்மீரியாவைக் கைப்பற்றியது. பின் வாலன்ச்சியா பேரரசின் மாகாணமான அல்மொராவித், டோர்டோசா, ஃப்ராகா, ல்லீய்டா, மெக்வென்ஸா, சிக்ரி மற்றும் எப்ரோ ஆகியவற்றையும் வரிசையாகக் கைப்பற்றினார்கள்.
இந்த தருணத்தில் இஸ்லாமிய உலகில் பெரிய முழுநேர இராணுவமாக 10,000 வீர்ர்களைக் கொண்டு செல்ஜுக் பேரரசு மட்டுமே இருந்தது. அடுத்து சிறுவயது முதலே பயிற்சி பெற்ற தொழில் ரீதியான இராணுவம் மம்லுக்குகளிடம் இருந்தது. 15
1148 ல் ஸங்கியின் மகன் நூருத்தீன் டமாஸ்கஸில் சிலுவைப் படைகளை துவம்சம் செய்தார். அதுவும் ஜெர்மனி மற்றும் ஃப்ரான்ஸ் மன்னர்களை சாதுரியமாக நூருத்தீன் எதிர்த்து வெற்றி பெற்ற செய்தி மொத்த அரபு உலகத்தையும் உற்சாகப்படுத்தியது. சிலுவைப் படைகள் போரில் தோல்வியுற்றிருந்தாலும் கிழக்கு மெடிட்டரேனியன் பகுதியில் மிச்சமிருக்கும் நகரங்களை வெல்வதிலும் அங்கிருக்கும் முஸ்லீம், கிறிஸ்தவ, யூதர்களைக் கொல்வதிலும் முனைப்பு காட்டினார்கள். 1156 ல் ஃப்ரான்ஸ் மன்னன் ரெய்னால்ட் சைப்ரஸ் மீது ஆக்கிரமித்து வளம் தரும் பயிர்களை நாசம் செய்து, கால்நடைகளை அழித்து, மக்களைக் கொன்றான். பெண்களைக் கற்பழித்து, தேவாலயங்களைக் கொள்ளையடித்து, கட்டிடங்களை இடித்தும் தீவைத்தும் கொளுத்தினான். கிரேக்க பாதிரியார் ஒருவரின் மூக்கை அறுத்தான். இதுபோல் அத்தனைக் கொடுமைகளுடனும் 1168 ல் எகிப்தின் அரபு நகரமான பில்பைய்ஸைப் பித்தார்கள். 1169 ல் அற்புதமான குணநலன்களையுடைய சலாவுத்தீன் அய்யூபி என்பவர் எகிப்தில் ஆட்சிக்கு வந்தார். 1180 ல் சலாவுத்தீனுக்கும், சிலுவைப் படைகளுக்கும் இடையே போடப்பட்டிருந்த ஒரு ஒப்பந்தத்தை மீறி, 1181 ல் ரெய்னால்ட் மக்கா புனிதப் பயணம் போய்க்கொண்டிருந்த யாத்திரிகர்கள் வாகனத்தைக் கொள்ளையடித்தன. ஐந்து சண்டைக்கப்பல்களை அரபு துறைமுகமான இலாத்தில் நிறுத்தி வைத்து வாணிபத்தடங்கள் செய்தான். ஹிஜாஸி, யான்பு துறைமுகங்களைக் கொள்ளை அடித்து புனித மக்கா நகரத்தையும் மிரட்டினான்.
சலாவுத்தீனின் சகோதரி பயணம் செய்து கொண்டிருந்த வாகனத்தையும் கொள்ளை அடித்தான். மீண்டும் 1187 ல் பெரிய மக்கா யாத்ரீகர்கள் கூட்டத்தைக் கொள்ளை அடித்தான். எதிர்த்த ஆண்கள் அனைவரையும் கொன்றான். ஒரு பயணி சலாவுத்தீனின் ஒப்பந்தத்தை நினைவூட்ட, அதற்கு அந்த ஃப்ரான்ஸ் மிருகம் ரெய்னால்ட், ‘உங்கள் முஹம்மது வந்து விடுதலை செய்வார் காத்திருங்கள்’ என்றான். இதைக் கேள்விப்பட்ட சலாவுத்தீன் தனது கைகளால் ரெய்னால்டைக் கொல்வேன் என்று திருக்குரான் மீது சத்தியம் செய்து கொண்டார். சலாவுத்தீன் எகிப்து அல்லாமல் சிரியா, வட ஈராக், லிபியாவின் ஒரு பகுதியான பர்காஹ், ஹிஜாஸ், ஏமன் ஆகியவற்றை வென்றபின் சிலுவைப் படைகளை வெல்ல சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தார். 1187 ல் தாமதிக்காமல் சிலுவைப் படைகள் மீது போர் தொடுத்தார். சலாவுத்தீனின் அளப்பறிய போர் திறமை சிலுவைப் படைகளை ஹத்தீன் போரிலும், வட பாலஸ்தீனின் டைபீரியஸ் ஆற்றின் போரிலும் துவம்சம் செய்தது. இந்தப் போரின் முடிவில் சலாவுத்தீன் எதிரிகள் மீது காட்டிய கருணை இன்றளவும் (என்றைக்கும்) உலக சரித்திர ஆசிரியர்களால் போற்றப்படுகின்றது. ஜெருசலம் மன்னனை விடுதலை செய்து, மிருகம் ரெய்னால்டை சபதம் செய்தது போல் கொன்றார். அவனது உடலை மற்றொரு ஃப்ரென்சுக்காரனிடம் காட்டி இவன் நம்பிக்கை துரோகமும், கொடுமைகளும் செய்ததற்கான தண்டனை இதுதான் என்றார். சிலுவைப் படைகளின் தோல்வியினால் மீண்டும் ஜெருசலம் நகரம் முஸ்லீம்களின் சுதந்திரப் பிரதேசமானது. அடுத்த சில மாதங்களில் தொடர்ந்த படையெடுப்பால் அக்ரி, டோரான், பெய்ரூட், ஜுபைல் (பைப்லோஸ்), சைய்தா, நாஸரெத், கெய்சாரியா, நபுலுஸ், ஜஃப்ஃபா, ஹாஃபா, அஸ்கலான் ஆகியவை மேற்கத்திய கிறிஸ்தவ வெறியாளர்களிடமிருந்து விடுதலைப் பெற்றன. 88 ஆண்டு காட்டுமிராண்டி காலனி ஆட்சிக்குப் பிறகு ஜெருசலம் சுதந்திரக் காற்றை சுவாசித்தது. ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மிஹ்ராஜ் பயணம் மேற்கொண்ட அதே நினைவு நாளில் 1187 அக்டோபர் 2, வெள்ளி கிழமை சலாவுத்தீன் வெற்றி வீரராக ஜெருசலத்தில் கால் பதித்தார். கொடுமையான வகையில் 88 ஆண்டு காலம் முஸ்லீம்களைக் கொன்றும், பெண்களைக் கற்பழித்தும், கொள்ளைகளும் புரிந்த சிலுவைப்படை வீரர்களை ஆயிரக்கணக்கில் மன்னித்து அவர்கள் திரும்பிப் போகச் செய்தார். கருணையே வடிவாக அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஜெருசலத்திற்கு புனித பயணம் வரலாம் என்று அனுமதி கொடுத்தார். சிதறிப் போயிருந்த யூதர்களை அழைத்து பழைய இடங்களில் அவர்களைக் குடி அமர்த்தினார். டையர் என்னும் அரபு நகரமும், திரிபோலி, ஆண்டியாக் இன்னும் சிலுவைப்படைகள் வசமே இருந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக